Saturday, April 11, 2009

கலைஞருடைய ஆளா மோகன் எம்.பி....??

“கம்யூனிஸ்ட் எம்.பியே கலைஞருடைய ஆள்தான்” என்ற தலைப்பில் ஜூனியர் விகடன்(ஏப். 12, 2009) பத்திரிகையில் கற்பனைக் கதை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. புலனாய்வு இதழ் என்று தன்னைக் கூறி கொள்ளும் ஜூனியர் விகடன் கதையில்லாத குறையை இத்தகைய கட்டுக் கதைகளை வெளியிட்டு பக்கங்களை நிரப்புவது பரிதாபகரமானது. அதுவும், மொட்டை கடுதாசி என்று அந்தப் பத்திரிகையே கூறிக் கொண்டு தற்போதை எம்.பி. மோகனின் அப்பழுக்கற்ற அரசியல் பணியை இழிவு படுத்த முயன்றுள்ளது.

இனிமேல், மொட்டைக் கடுதாசி எழுதுபவர்கள் சிரமப்பட வேண்டாம். ஜூ.வி. முகவரிக்கு அனுப்பிவிட்டால் போதும் எத்தனை பக்கம் இருந்தாலும் அவர்கள் அதை பிரசுரித்துவிடுவார்கள்.முதல்வரோடு மோகன் தொலை பேசியில் பேசினார் என்பது இதில் கூறப்பட்டுள்ள ஒரு குற்றச்சாட்டு. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் முதல்வர் பொறுப்பில் உள்ள ஒருவரோடு பேசியது தவறா? முதல்வர் கருணாநிதியை மோகன் ரகசியமாக சந்தித்த செய்தி முரசொலி ஏட்டில் வெளியாகிவிட் டது என்று மேலும் ஒரு அவதூறு. முரசொலி ஏட்டில் வெளியாவது எப்படி ரகசிய சந்திப்பாகும் என்று தெரிய வில்லை. மோகன் ரகசியமாக முதல் வரை சந்திக்கவில்லை. எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடியிருக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக முதல்வரை அவர் சந்தித்திருக்கிறார்.

“மதுரை சங்கம் ஓட்டல் கை மாறிய பஞ்சாயத்தில் இவரும் பெரிய அளவில் கவனிக்கப்பட்டார்” என்றும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை கூசாமல் வெளியிட்டுள்ளது இந்த ஏடு. மோகன் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்துள்ள 10 ஆண்டு காலத்தில் எந்தவிதமான பேரத்திலோ, கட்டபஞ்சாயத் திலோ ஈடுபட்டதில்லை, நயா பைசா பெற்றதில்லை என்பதை கட்சியின் அரசியல் எதிரிகள் கூட ஒத்துக் கொள்வார்கள். தொகுதி மேம்பாட்டு நிதி பணிகளில் கமிஷன் கேட்டதாக யாரும் விரல் நீட்டி குற்றம் சாட்ட முடியாது. அண்மையில் வெளியான சண்டே இந்தியன் வார இதழ், நேர்மையான எம்.பி.க்கள் என்று போட்ட பட்டியலில் மோகன் பெயரும் இருந்தது. மோகனின் கட்சிக்கு அரசியல் ரீதியாக எதிர் துருவத்தில் நிற்கும் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ தெய்வநாயகம் கூட அந்தப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், மோகனுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருந்தார்.

தினகரன் பத்திரிகை எரிப்பு சம்பவம் நடந்த போது, மோகன் தாமதமாகவே தலையிட்டார் என்பது மொட்டை கடுதாசியில் கூறப் பட்டுள்ள மற்றொரு அவதூறு. முதல் வர் கருணாநிதியின் குடும்ப பிரச் சனை காரணமாக மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூன்று அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டது. இந்த வன்செயல் நடந்தவுட னேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ‘குற்றவாளிகளை கைது செய்’ என்ற முழக்கத்தோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மோகனும் பங்கேற்று உரையாற்றினார். மதுரையே அச்சத்தின் பிடி யில் உறைந்திருந்த போது மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்ட மும், அதில் மோகன் ஆற்றிய உரையும்தான் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. மொட்டை கடுதாசிகளால் இந்த உண்மையை முனை மழுங்க செய்யமுடியாது.

திமுக பிரமுகர் ஒருவர் வீட்டில் பணியாற்றிய நர்ஸ் கற்பகவள்ளி மர்மமான முறையில் இறந்த போது நீதி கேட்டு போராடுவது என்று மார்க்சிஸ்ட் கட்சியும், மாதர் சங்கமும் முடிவெடுத்தது. மாதர் சங்கம் சார்பில் மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் திருமங்கலத்தில் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் கட்சியின் பிற தலைவர்களோடு மோகனும் பங்கேற்றார்.சன் டி.வி. நிர்வாகத்திற்கும் மு.க.அழகிரிக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் அழகிரி மகனால் ராயல் கேபிள் விஷன் துவக்கப்பட்டு அதில்தான் சேர வேண்டும் என்று கேபிள் ஆப்ரேட்டர்கள் மிரட்டப்பட்டனர். அப்போது, கேபிள் ஆப் ரேட்டர்களுக்கு ஆதரவாக மோகன் குரல் கொடுத்தார். தினகரன், தமிழ் முரசு நாளேடுகளிலேயே இதற்கான ஆதாரம் உள்ளது.

அதே போன்று சன் டி.வி. நிர்வாகத்தால் வெளியிடப் பட்ட திரைப்படத்தை மதுரையில் வெளியிட ‘தடை’ விதிக்கப்பட்ட போதும், மார்க்சிஸ்ட் கட்சி இதை எதிர்த்து போராடியது. மோகனும் களத்தில் முன்நின்றார்.திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் மதுரையில் படு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அரசியல் ரவுடித்தனத்தை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. கேரள மாநில முன்னாள் முதல்வர் இ.கே.நாயனார், கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் ஆகியோரோடு மோகனும் அந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். மாணவப் பருவத்திலேயே பொதுவுடைமை இயக்கத்தில் தம்மை இணைத்து கொண்ட தோழர் மோகன், கட்சி நடத்தும் அனைத் துப் போராட்டங்களிலும் தவறாமல் பங்கேற்று வருபவர்.

நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு முறை இருந்த போதும் ஒரு கட்சி ஊழி யராக, மக்கள் சேவகராகவே தன்னை முன்னிறுத்திக் கொள்பவர்.எம்.பி. மோகன் மக்களோடு மட்டும் உறவு பாலம் அமைத்திருப்பவர். மொட்டை கடுதாசி எழுதுபவர்களாலோ அல்லது குறைந்தபட்ச பத்திரிகை தர்மத்தைக் கூட பார்க்காமல் அதை வெளியிடுபவர்களாலோ அந்த பாலத்திலிருந்து ஒரு செங்கலைக் கூட உருவ முடியாது.

1 comment:

  1. மதுரை ஜுனியர் விகடனில் பணிபுரியும் ஒரு கத்துக்குட்டி நிருபர் சஞசீவ்குமார். மதுரையின் நிகழ்வுகளை பற்றி எதுவும் தெரியாதவர். அவர் அன்றாடம் அடிக்கும் தண்ணிக்கு பணம் வேண்டுமே? யாரிடம் போவார்? வழியே இல்லை. இப்படி எந்த அப்பழுக்கும் இல்லாத தற்போதைய எம்.பி மோகனை குற்றம்சாட்டுவதன் மூலம் திட்டமிட்டு அழகிரிக்கு ஆதரவு திரட்ட முனைந்திருக்கிறார் என்பதே உண்மை. இப்படி ஆதரவு திரட்டுவதன் மூலம் சஞ்சீவியின் இருப்பிடம் தேடி பணம், சரக்குகள் அழகிரி வட்டாரத்திலிருந்து போகும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மக்களுக்கு சற்றும் பிடிக்காத அழகிரிக்கு ஜால்ரா தட்டிய குமுதம் ரிப்போர்டர் இப்போதெல்லாம் கடைகளில் தூங்க தொடங்கி விட்டது, காரணம், அழகிரியின் புகழை அடிக்கடி பாடி சலிப்படைய வைத்தது.சஞசீவ் குமார் பிழைப்புக்கு ஜுனியர் விக்டன் மதுரையில் பலியாக போவதை நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது.

    ReplyDelete